Bakers Food And Allied Workers Union தேசிய கலந்துரையாடலில் – தமிழ்த் தோழமை இயக்கம்

ஜெலான்

கடந்த 07.06.2015 அன்று சவுத்போர்ட் ( Southport ) இல் ஆரம்பமான Bakers Food And Allied Workers Union ( உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் தொழிலாளர்களின் சங்கம் ) இன் தேசிய கலந்துரையாடலில் தம்மையும் இணைத்துக்கொண்ட தமிழ்த் தோழமை இயக்கம் தம் சமகால போராட்ட இலக்குகள் மற்றும் இலங்கையின் அரசியல் நிலவரத்தில் தொடர்ந்து நீடிக்கும் பெரும்பான்மையின் பக்கச்சார்பு நிலைமைகள் என்பவற்றை துண்டுப்பிரசுரங்கள் மூலம் குறித்த தொழிற்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர முயன்றது.

09.06.2015 வரையான மூன்று நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி மிகவும் பயனளித்தது எனும் வகையில் முதல் நாளிலேயே குறித்த தேசிய ஒன்றியத்தின் கிளைப்பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் தமிழ்த் தோழமை இயக்கம் மிகவும் பரிட்சயமான அரசியல் இயக்கமாக மாறியது.

ஏனெனில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களின் கரங்களுக்கும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டமையும், உறுப்பினர்கள் நல்முகத்துடன் அதனைப் பெற்றுக் கொண்டமையும் இங்கு முக்கியமான அம்சங்கள்.

குறிப்பாக தமிழ்த் தோழமை இயக்கத்தின் உறுப்பினர் ஜனகன் இக்கலந்துரையாடலில் தமக்கு ஏற்பட்டிருக்கும் உயிராபத்தான நிலைமை பற்றியும் ஏராளமான இலங்கை தமிழ் மக்கள் இந்நிலைமையில் தவிப்பது பற்றியும் எடுத்துரைத்த உணர்வுப்பகிர்வு சிறப்பானது.

ஜனகன் பிரித்தானியாவில் அகதியாய் தஞ்சம் கோரியுள்ள ஓர் ஈழத்தமிழ் இளைஞன். அவரது கோரிக்கை Home Office இனால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் பேராபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இவ்வாறு இலங்கையிலிருந்து உயிராபத்தான நிலைமையில் அரசியல் தஞ்சம் கோரிய பல ஈழத்தமிழ் இளையோர் மீண்டும் நாடுகடத்தப்படும் அபாயமான சூழ்நிலை பிரித்தானியாவில் தோன்றியுள்ளது.

இலங்கைப் பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஈழத்தமிழ் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் எனும் போலி நம்பிக்கைக்கு பிரித்தானிய அரசும் உடன்பட்டிருப்பதே இங்கு மிக கவலையான விடயம்.

இந்நிலைமைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ்த் தோழமை இயக்கம் ஜனகனின் கோரிக்கைக்கும் ஆதரவாகப் போராடி அவருக்கான தற்காலிய விடுதலையில் பெரும் பங்காற்றியுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த ஜனகன் ஆதரவு வழங்கிய பிரித்தானிய நெஞ்சங்கள் ஒவ்வொன்றுக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்த் தோழமை இயக்கத்தின் பிரித்தானிய வடமேற்கு இணைப்பாளர் பாரதி தம் கருத்துக்களைப் பகிர்கையில் தமிழ்த் தோழமை இயக்கத்திற்கான ஆதரவைக் கோரியதுடன் முற்கூட்டியே ஆதரவு வழங்கிவரும் நல்உள்ளங்களுக்கு இயக்கத்தின் சார்பிலும் ஜனகனின் சார்பிலும் நன்றி தெரிவித்தார்.

குறித்த தருணத்தில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களின் கவனமும் தமிழ்த் தோழமை இயக்கத்தை நோக்கியே இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அந்தவகையில் கிளைஉறுப்பினர்கள் பலர் தமிழ்த் தோழமை இயக்கத்திற்கான தம் ஆதரவை கையொப்பமிட்டு உறுதி செய்துள்ளனர். இடைவேளைகளில் பலர் தம் கருத்துக்களைப் பகிர்வதில் ஆர்வம் காட்டியமை அவர்களது தோழமை உணர்வையும் வெளிப்படுத்தியது.

ஈறாக, தமிழ்த் தோழமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான முயற்சிகள் மேலும் பல தேசிய தொழிற்சங்கங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.