தமிழ் மக்களின் வாக்கு யாருக்கு ?

இங்கிலாந்தில் நிகழ இருக்கும் ஊள்ளுர் தேர்தல் சம்மந்தமாக தமிழ் சொலிடாறிற்றியின் வேண்டுகோள்.
உங்கள் உரிமைகளைக் காக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் உங்கள் வாக்குகளை வழங்குங்கள்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு பிறந்து வளரும் முதற் தலைமுறை வேலை வாய்ப்புகளைத் தேடத் தொடங்கும் இக்கால கட்டத்தில் இங்கிலாந்து வாழ் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது? ஈழத்தில் மக்கள் படுகொலைக்குள்ளாகி தொடர் அடக்குமுறையைச் சந்தித்து வரும் அதே வேளை இங்கிலாந்தில் வாழும் நம்மிற் பலர் துவேசம், வேலை வாய்ப்பின்மை, முறையான வீட்டு வசதியின்மை முதலான பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

நாம் எங்கு வாழ்ந்தாலும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடுவது எமது கடமை. ஆனால் இங்கிலாந்தில் எமது அரசியற் குரல் நசுக்கப்பட்டநிலையிலேயே உள்ளது. முக்கிய அரச கட்சிகளான லேபர் கட்சி, கன்சவேட்டிவ் கட்சி, லிபரல் டெமொகிராட் கட்சி முதலான கட்சிகள் ஒருபோதும் சிறுபான்மை மக்களின் குரலாக இயங்கியதில்லை. அவை மக்களுக்குக் குரல் கொடுப்பதாக பாவனை செய்கின்றனவே தவிர அக்கட்சிகளுக்கு மத்தியில் கொள்கை ரீதியில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் வாக்குகளைக் கேட்டு எமது கூட்டங்களில் வந்து பேசுகிறார்கள். ஆனால் இன்றுவரை எமது உரிமைக்குரல் அவர்கள் காதுகளில் விழுந்ததில்லை. லேபர் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் ஈழத்தில் படுகொலை நிகழ்ந்தது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

ஆயிரக்கணக்கான தழிழர்கள் தெருவிற் கத்தி கத்தி ஈழப்படுகொலையை நிறுத்தக் கோரிய பொழுது லேபர் அரசு கண்மூடி ராஜபக்ச அரசுக்கு இராணுவ உதவிகள் செய்துகொண்டிருந்தது தெரிந்ததே. கன்சவேட்டிவ் கட்சி எம்மை காப்பாற்றும் என நாம் ஏமாந்துவிடக்கூடாது. இவர்கள் ஆட்சியில் துவேசம் வளர்ந்து வருகிறது. வேலை வாய்ப்பு குறைந்துள்ளது –குறிப்பாக ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையினர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதைப் புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. சம்பளம் ஒரு சொட்டும் அதிகரிக்கவில்லை. ஆனால் வீட்டு வாடகை வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழர் அதிகமாக வாழும் நியுகாமில் மட்டும் கடந்த ஆண்டு வாடகை 40 வீதம் அதிகரித்துள்ளது. சிறுபான்மையர் உரிமைகள் தாக்கப்படுகின்றன. துவேசிகளான பி.என்.பி போன்ற அமைப்புக்கள் – அல்லது துவேசத்தை மறைத்து இயங்கும் துவேசிகளான யுகே இன்டிபென்டன் கட்சி முதலான அமைப்புக்கள் வளர்ந்து வருகின்றன. வைத்தியசாலையின் பிரிவுகள் மற்றும் நூலகங்கள் முதலிய சேவைகள் மூடப்பட்டு வருகின்றன. நிவாரண (பெனிபிட்) சலுகைகள் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாம் எமது வாக்குகளை கேட்டுக்கேள்வியின்றி இந்தக் கட்சிகளுக்கு வழங்கத்தான் வேண்டுமா?
எமது வாக்குப் பலத்தை நாம் எமது உரிமைக் கோரிக்கையின் குரலாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் வாக்களிக்க முன் பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்.

வேட்பாளர் பிரதிநிதித்துவம் செய்யும் கோரிக்கைகள் என்ன? அவர் துவேசத்தை எதிர்பவரா? அவர் உங்கள் பகுதி சேவைகள் முடக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவரா? குறிப்பாக வைத்தியசாலைகள் மற்றும் நூலகங்கள் முடக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவரா? உங்கள் பகுதியில் நிகழும் உள்ளூர் போராட்டங்களில் இவர் பங்குபற்றியவரா? உங்கள் பகுதி சிறுபான்மையரை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறாரா?

இக்கேள்விகளுக்கு விடை ஆம் என்றால் அவருக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் அத்தகைய வேட்பாளர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பகுதியில் அத்தகைய வேட்பாளர் நிற்கிறாரா என்று அறிய தமிழ் சொலிடாறிற்றியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். வரும் தேர்தலில் ஏராளமான போராட்ட சக்திகள் தேர்தலில் நிற்கின்றன. இங்கிலாந்து வரலாற்றில் முதல் தடவையாக இது நிகழ்கிறது. ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், ரயில் வேலையாட்கள், தொழிற் சங்க வாதிகள், சோசலிஸ்டுகள், மற்றும் பல சாதாரன மக்கள் வரும் தேர்தலில் நிற்கிறார்கள். அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் அவர்களோடு பல தமிழர்களும் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்களிற் பலர் தமிழ் சொலிடாறிற்றி உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் வாக்குகளை இவர்களுக்கு வழங்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அரசதிகார கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை ஆதரிப்பவர்களா ? என்பதும் ஒரு முக்கியமான கேள்விதான். ஆனால் உதட்டளவில் மட்டும் உரிமைக்குரல் கொடுக்கும் இந்த போலி அரசியல் வாதிகளின் பேச்சுகளை நம்பி வி;டாதீர்கள். எங்கோ தூரத்தி;ல் இருக்கும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உதட்டவில் குரல் கொடுப்பது இவர்களுக்கு சுலபம் – அதே சமயம் இங்கிலாந்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இவர்கள் என்ன செய்ய தயாராக இருக்கிறார்கள்?

இவர்களின் உள்நாட்டு நடவடிக்கைகளின் நீட்சியாகத்தான் அவர்தம் வெளிநாட்டுக் கொள்கைகளும் இருக்கின்றன. எமது உரிமைகளைப் பறித்தும் தடுத்தும் வரும் அதே வேளை எம்மை வாக்கு வங்கிகளாக பாவித்து வருகிறார்கள். எம்மை வாக்கு வங்கிகளாக பாவித்துப் பல இடங்களை இக்கட்சிகள்(குறிப்பாக லேபர் கட்சி) தம் கைவசப்படுத்தி வைத்திருப்பதை நாமறிவோம். சிறுபான்மையர் ஆதரவு கன்சவேட்டிவ் கட்சிக்கு இருந்த வரலாறு கிடையாது. ஏனைனில் அக்கட்சி இந்நாட்டு சிறுபான்மையருக்கு எதரிரான கொள்கைகளையே தொடர்ந்து செயற்படுத்திவருகிறது.
மேற்சொன்னபடி கேள்விகளை நீங்கள் கேட்கத் தொடங்கினால் ஒரு அதிகார கட்சிகளுக்கும் வாக்களிக்க முடியாது என்ற நிலைக்கு நீங்கள் வந்து சேர முடியும். குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர அனைத்து அதிகார கட்சி வேட்பாளர்களும் ஏதோ ஒரு விதத்தில் அடக்குமுறைகளுக்கு துனை போபவர்களாகவே இருக்கிறார்கள். நாம் அவர்கள் அனைவரையும் மறுக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட ரீதியில் இத்தேர்தலில் பங்கு பற்றும் பல்வேறு போராட்ட சக்திகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்குங்கள்.

உங்கள் வாக்கை தெளிவான அரசியல் பதிலாக மாற்றுங்கள். உங்கள் உரிமைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சரியாக பிரதிநிதித்துவம் செய்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்.